Monday, March 5, 2012

ஆயத்தமாதல்




நன்றி: 'வடக்கு வாசல்' மார்ச் 2012

Tuesday, August 10, 2010

பஞ்சு மிட்டாயும் பரன் கிடாயும்


வேண்டும் வேண்டுமென்று
வெறிகொண்டு குதிக்கிறாள்
மண்ணில் படுத்து உருளுகிறாள்
அவ்வீட்டை விட்டு நகர மறுக்கிறான்
தள்ளுவண்டிக்காரன் -
மணியை வேகமாக ஆட்டியபடி.
அழுகையையும் ஆடும் மணியையும்
நிறுத்த முடியவில்லை யாராலும்
பரனேறிய சாமியின் பரவசத்தைக்
காண முடிந்தது
கிடைத்துவிட்ட பஞ்சு மிட்டாயை
தின்று கொண்டிருக்கும் சிறுமியிடம்

நன்றி : யுகமாயினி ஆகஸ்ட் 2010

Monday, February 22, 2010

நகங்களை வெட்டப்போவதில்லை


நீண்ட விரல்களையும்
நகங்களையும் உடைய பேய்கள்
இப்போதெல்லாம் கனவில் வருவதில்லை
வளர்ந்தபடியே இருக்கும்
என் நகங்களைக் கண்டு
அஞ்சுகின்றன அவைகள்

அரிக்கும் முதுகையும்
அழுக்கு உடம்பையும்
தேய்க்கும் போது
உதிரம் காணவேண்டுமென்ற
அவற்றின் ஆசைகள்
எப்படியோ நிகழ்ந்து விடுகிறது

அலுவலகத்தில் அதிகாரிகளுடனும்
பிறரிடமும்
வெளியில் சந்திக்கும் சில கவிஞர்களிடமும்
கைகுலுக்கும்போது
அசெளகர்யமாக இருக்கிறது
முன்பை விடவும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது
எனதிந்த செய்கையால்

எது எப்படியாகினும்
நகங்களை வெட்டப்போவதில்லை
சிறுபிராயத்தில் பாட்டி சொன்ன பேய்க்கதைகள்
நினைவிலிருக்கிறது இன்னமும் -
கனவில் வந்துபோகும்
சில பேய்களும்
அதன் இருப்பை உறுதிப்படுத்துகின்றன

நன்றி : உன்னதம் இதழ் பிப்ரவரி 2010

Saturday, January 9, 2010

மழைக்காதல்

மண்ணுக்கும் விண்ணுக்குமான தொலைவினை
யார் பிரிவாய்த் தந்ததந்த மழைக்கு?
சில தருணங்களில் மெல்லிய தூறலாகவும்
மாலைப் பொழுதுகளில் மாமழையாகவும் -
பிரிவினை போக்கிட தழுவிச் செல்கிறது தன் காதலை
அன்பின் மிச்சங்களாய்த் தொக்கி நிற்கின்றன
அந்த இலை மீதும் காய் மீதும்
மென்மை விரும்பிகளின் காதல் முழுமையாகட்டும்
காதலித்து போகட்டும் இன்னும் சில நேரம்!


நன்றி : யுகமாயினி மாத இதழ் (சனவரி 2010)